வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் .
இந்த கொலை அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பிரவீனை கொலையாளிகள் வெட்டிக்கொலை செய்வது பதிவாகியிருந்தது. அந்த பதிவின் உதவியோடு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.ஆர் கேட்டு என்ற இடத்தைச் சேர்ந்த சசிகுமார், பன்னீர்செல்வம், அஜித் குமார் மற்றும் 18 வயதுக்கும் கீழான 2 சிறுவர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரக்கோணம் அருகே நடந்த கொலை வழக்கில் பிரவீனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.