சாலையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதிக்கு மனு கொடுத்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன் மற்றும் குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பலர் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் கூறியிருந்ததாவது “கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை நகரத்தில் மூடப்பட்டிருந்த அண்ணா நகர் புறவழிச் சாலையை திறக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த சாலை திறப்பது தொடர்பாக கடந்த ஆண்டு ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அதில் 30 நாட்களில் சாலை திறக்கப்படும் என்று தெரிவித்தபோதும் இதுவரை அதை செயல்படுத்தவில்லை.
பின்னர் குளித்தலை போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்து இளைஞர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில் சாலை ஒரு மாதத்திற்குள் திறக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தும் இதுவரை மூடப்பட்ட சாலையின் திறப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் மூடப்பட்ட சாலையை வந்து நேரில் ஆய்வு செய்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மூடப்பட்ட சாலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பாதையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தது.