பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியில் சக்திமுருகன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜாவும் டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் முன்பகை காரணமாக சக்திமுருகனையும், அழகுராஜவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திமுருகன் இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தகராறில் ஈடுபட்ட மேலக்கன்னிசேரியை சேர்ந்த தினேஷ்குமார், மற்றும் மீனாகுமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்ற ஆட்சியர் சந்திரகலா தினேஷ்குமார் மற்றும் மீனாகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.