Categories
உலக செய்திகள்

கடும் வறட்சியால் யானைகளை விற்கும் ‘ஜிம்பாப்வே’

கடும் வறட்சியால் 55 யானைகள் உயிரிழந்ததையடுத்து ஜிம்பாப்வே அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட யானைகளை விற்பனை செய்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு 55 யானைகள் பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேயின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில்தான் இந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆயிரம் யானைகள் மட்டுமே தங்கும் இடத்தில் தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக யானைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பூங்காவில் உள்ள நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. இந்த நிலையில் வறட்சியை சமாளிக்க முடியாததாலும், கையில் போதிய அளவு நிதி இல்லாததாலும் வளரிளம் பருவத்தில் உள்ள யானைகளை அந்நாட்டு அரசு விற்பனை செய்து வருகிறது.

யானைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அவற்றை வெளிநாடுகளில் இருக்கும் உயிரியல் பூங்காக்களுக்கு விற்பது மட்டுமே ஒரே தீர்வு என ஹவாங்கே தேசிய பூங்கா முடிவு செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அரசு தற்போது 30க்கும் மேற்பட்ட யானைகளை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. ஜிம்பாப்வேயின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |