Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : வெறித்தனம்…. “சதம் அடித்து பயம் காட்டிய ராசா”…… நெருங்கி தோற்ற ஜிம்பாப்வே…!!

ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி மதியம் 12:45 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல்  பேட்டிங்கை தேர்வுசெய்தார்.. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதிலாக அவேஷ் கான் மற்றும் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 97 பந்துகளில் 130 ரன்கள் (15 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார்.. மேலும் இஷான் கிஷன் 50 ரன்களும், ஷிகர் தவான் 40 ரன்களும், கேஎல் ராகுல் 30 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிராட் இவன்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்களாக தகுத்ஸ்வானாஷே கைடானோ மற்றும்  இன்னசென்ட் கையா ஆகிய இருவரும் களமிறங்கினர்.. இந்த போட்டியிலாவது நல்ல தொடக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபக் சாஹரின் 3ஆவது ஓவரிலேயே கையா எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அதன்பின் கைடானோ – சீன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடிய நிலையில், சிறப்பாக ஆடி வந்த வில்லியம்ஸ் 17ஆவது ஓவரில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த முனியோங்கா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து கைடானோவும், ரெஜிஸ் சகாப்வாவும் இணைந்தனர்.. இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. கைடானோ 13 ரன்னில் ஆட்டமிழக்க, அதை தொடர்ந்து சகாப்வா 16 ரன்னில் நடையை கட்டினாலும் 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய  சிக்கந்தர் ராசா ஒற்றை ஆளாக மறுமுனையில் அரைசதம் கடந்து போராடினார்.

இவர் ஒருபுறம் சிறப்பாக ஆட மறுமுனையில் உள்ளே வந்த ரியான் பர்ல் 8, லூக் ஜாங்வே 14 ரன்கள் என சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.. இதையடுத்து பிராட் ஏவன்ஸ் – ராசா ஜோடி பொறுப்பாக ஆடியது. ராசா ஒருபுறம் அதிரடி காட்டி சதத்தை நெருங்க, மறுபுறம் ஏவன்ஸ் விக்கெட்டை இழக்காமல் தட்டி தட்டி நிதானத்தை கடைபிடித்தார்.. கடைசியில் 4 ஓவருக்கு 40 ரன்கள் என்ற நிலை வந்தது. பின் ஷர்துல் தாக்கூர் வீசிய 47ஆவது ஓவரில் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து ராசா சதம் அடித்து அசத்தினார்..

ராசாவின் விக்கெட்டை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இந்திய அணி வீரர்கள் தள்ளப்பட்டனர்.. ஜிம்பாப்வே வெற்றிக்கு 18 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டது. அந்த 48ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீச 1 பவுண்டரி, 1 சிக்சர் என அடித்து இந்திய அணி வீரர்களை மிரள செய்தார் ராசா.. பின் அதே ஓவரில் ஏவன்ஸ் ஒரு பவுண்டரி அடித்து விட்டு கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.. இருப்பினும் அந்த ஓவரில் 16 ரன்கள் வந்துவிட்டது..

 

பின் ரிச்சர்ட் ங்கராவா உள்ளே வர கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட பரபரப்பான நிலையில், சிக்கந்தர் ராசா ஷர்துல் தாக்கூரின் 4ஆவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராசா 95 பந்துகளில் 115 ரன்கள் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தார்.. வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்து வெற்றியை தட்டி பறித்தார் ஷர்துல்.. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட 2 ரன் மட்டுமே கொடுத்து விக்டர் நியாச்சியை போல்ட் செய்தார் ஆவேஷ் கான்..

இதனால் ஜிம்பாப்வே 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்திய அணியில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் தலா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.. இதனால் 3-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்தது இந்தியா .

 

Categories

Tech |